வ.சுப.மாணிக்கனார் அறக்கட்டளை

1986 இல் மாணிக்கனார் எழுதிய விருப்பமுறியில் எழுதினார்: “உடைமைகளில் ஆறில் ஒரு பங்கினை அற நிலையத்தின் வைப்பு மூலநிதியாக வைத்து அதிலிருந்து வரும் வருமானத்தினை நான் பிறந்த ஊரான மேலைச்சிவபுரியில் கல்வி, மருத்துவம், நலவாழ்வு, குழந்தைகள் நலன், அஃறிணை உயிர்களின் நலம் முதலான ஊர்ப் பொது நலங்கட்குச் சாதிசமய எவ்வகை வேறுபாடுமின்றி இலவசமாகச் செலவு செய்ய வேண்டியது”

மாணிக்கனார் நினைவு தினம் 2010 மே மாதம் 3 -ம் தேதி மேலைசிவபுரியில் கணேசர் செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் திரு.மணி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடந்தேறியது. மேலைசிவபுரியைச் சேர்ந்த திரு. முத்தப்பன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.வழமைபோல, மாணிக்கத் தொண்டர்கள் முனைவர்.பூங்குன்றன் அவர்களும், திரு.வேல் மாணிக்கம் அவர்களும் அனைத்து பணிகளையும் மிகச் சிறப்பாக செய்திருந்தார்கள். கல்லூரி,பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள், மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தார்கள். கல்வி, மருத்துவம், மற்றும் எளிய மக்களுக்கான கொடைகள் வழங்கப்பட்டன.

விழாவில், வ.சுப.மாணிக்கனாரின் துணைவியார் திருமதி.ஏகம்மை ஆச்சி அவர்களும், மற்றும் அவர்களின் குடும்பத்தார்.... திருவாளர்கள்.தொல்காப்பியன், திரு.சுப்பையா, தென்றல் அழகப்பன், மாதரி வெள்ளையப்பன், பாரி, பொற்றொடி செந்தில் வேலாயுதம், வள்ளிக்கண்ணு பாரி கலந்து கொண்டார்கள்.

பெரும்புலவர் வ.சுப.மாணிக்கனரின் 24-வது ஆண்டு நினைவு தினமும், அறக்கட்டளை நிகழ்வுகளும் 28.4.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மேலைசிவபுரி வ.சுப.இல்லத்தில் சிறப்பாகவும், எளிமையாகவும் நடைபெற்றது.வழக்கம்போல, மாணிக்கத் தொண்டர் பேராசிரியர் பூங்குன்றனாரும், மாணிக்கத் தொண்டர் வேல் மாணிக்கம் அய்யா அவர்களும், மற்றும் கணேசர் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்களும், கல்லூரி, பள்ளி மாணவர்களும், மேலைசிவபுரி பொதுமக்கள் துணையுடன் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தனர்.

மேலைசிவபுரியைச் சேர்ந்த ஏழைப் பெண்களுக்கு சேலை வழங்குதல், கல்லூரி,பள்ளியில் சிறந்த மாணவர்கட்கு ஊக்கப் பரிசு, உள்ளூர் மருத்துவ மனைக்கு மருந்துப் பொருட்கள் வழங்குதல், மழலையர் பள்ளிக்கு விளயாட்டுப் பொருட்கள் கொடை.... எல்லாம் சிறப்பாக நடந்தேறியது.

பேராசிரியர் திருஞான மூர்த்தி,பேராசிரியர் கனகராசு ,மேலைசிவபுரி மீனாட்சி சொக்கலிங்கர் நகரச் சிவன்கோவில் நடப்புக்காரியக்காரர் திரு (A I R) க.செயம்கொண்டான் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணிக்கனார் நினைவுகளையும், அருமை, பெருமைகளையும் தன்னிகரில்லாத் தமிழ்த் தொண்டினையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினார்கள். மாணிக்கனாரின் துணைவியார் திருமதி. ஏகம்மை ஆச்சி அவர்கள் மாணிக்கனாரின் தமிழ்த் தொண்டிற்கு பேருதவியாக இருந்தது பற்றியும் நினைவு கூர்ந்து அவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.மாணிக்கனாருக்கு மேலைசிவபுரியில் ஒரு நினைவுச் சின்னம் நிறுவி, அவரது நினைவைப்போற்றுவது நம் ஒவ்வொருவது கடமை ஆகும் என்பது அனைவரது எண்ணமாக இருந்தது. பேராசிரியர்களின் உரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திரு.க.செயம்கொண்டான் அவர்கள் தான் அகில இந்திய வானொலி நிலையத்தில் பணிபுரிந்த காலத்தே, மாணிக்கனார் சென்னை வானொலி நிலையத்திற்கு சென்றபோது சந்தித்த சுவையான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். தமிழ் வானொலி முற்றிலும் மற்ற மொழி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு தமிழ் நடைமுறைக்கு வரவேண்டும் என்ற ஆவலையும்,ஊக்கத்தையும் மாணிக்கனார் வெளிப்படுத்தினார். அந்த ஊக்கமும், தூண்டுகோலும், தான் நிறையத் தமிழ்ப்படுத்துவதற்கு உதவியாக இருந்ததாகச் சொன்னார்கள்.

VSP Manickam