வள்ளுவம்

திருவள்ளுவர் திருக்குறளை எழுதும்போது தாம் என்ன சொல்ல நினைத்திருப்பாரோ அக்கருத்துக்களை அப்படியே வெளிப்படுத்திய நூல் வள்ளுவம். ‘திருக்குறள் ஆராய்ச்சி நூல்களிலேயே இந்நூலை விஞ்சும் அளவில் வேறு நூல் தோன்றவில்லை’ என்பது ‘உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை’

தமிழ்க் காதல்

நெறியாகவும் அளவாகவும் உரமாகவும் நாணமாகவும் கற்பாகவும் காமக்கூறுகளைச் செவ்வனம் காட்டும் ஓர் உலக இலக்கியம் தமிழில்தான் உண்டு. அதுவே அகத்திணை. இத்திணைக் கல்வி, பருவம் வந்துற்ற நம்பியர் நங்கையர்க்கு எல்லாம் வேண்டும் வேண்டும் என்று வற்புறுத்தும் உயரிய ஆய்வு நூல்.

கம்பர்

முன்னைக் காப்பியங்களை முழுப்பார்வையோடு திறனாடுவதற்கும் வருங்காலத்துப் பெருங்காப்பியப் பனுவல்கள் முழுப்பார்வையோடு பிறப்பதற்கும் கம்பர் என்ற என்ற இத்திறனூல் தூண்டுகோலாகும்.

தொல்காப்பியக் கடல்

‘தொல்காப்பிய நயம்’ முதல் ‘தொல்காப்பியம் இன்றும் நாளையும்’ வரையிலான 31 தலைப்புக்கள் கொண்டது. தொல்காப்பியத்தின் தொன்மை, புதுமை, பெருமை, ஆக்கம், அருமை, ஆழம், நயம், செல்வாக்கு, எளிமை, இனிமை, எதிர்கால நோக்கு எல்லாம் இவற்றால் அறியலாம்.

திருக்குறட் சுடர்

‘வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டிய திருக்குறள், இலக்கிய ஆதிக்கம் செய்து வருகின்றதேயன்றி வாழ்வாதிக்கமோ அரசியலாதிக்கமோ செய்யவில்லை. மக்கள் தத்தம் நாள்வாழ்விலும் அரசியல் நடப்பிலும் திருக்குறளைச் செயல் வழிகாட்டியாகவோ சிந்தனையியக்கமாகவோ கொள்ளத் தவறிவிட்டனர்’ என்பதை இடித்துரைத்து வழிகாட்டும் செயல்நூல்.

சங்கநெறி

இலக்கிய விளக்கம், தொல்காப்பியப் புதுமை, தொல்காப்பியத் திறம், எந்தச் சிலம்பு, சிந்தனைக் களங்கள் என்ற நூல்களில் பரவிக் கிடந்த சங்கவிலக்கியம் பற்றிய கட்டுரைகள் ஒருங்கு குடிகொண்டுள்ளன.

காப்பியப் பார்வை

இருபது கட்டுரைகள் கொண்ட தொகுப்பு. நிலக்காப்பியம், தழுவுகாப்பியம் என்ற இருவகைக் காப்பியங்களும் பார்வை செய்யப்பட்டுள்ளன. என்றாலும் சிலப்பதிகாரம் மணிமேகலை இராமாயணம் மூன்றும் பெரும் பங்கு கொள்கின்றன.

இலக்கியச் சாறு

இந்நூல் பல இலக்கியங்களின் பிழிவாகும். திருவாசகம், திருக்கோவை, கோவையிலக்கியம், திருப்பாவை, திருவெம்பாவை, தைப்பாவைகள், பல சிற்றிலக்கியங்கள், தாயுமானவர் கவிதை, காந்திக் கவிதை, பாரதி கவிதை என்ற இலக்கிய வகைகளை வடித்தெடுத்த கருத்துச் சாறு.

ஒப்பியல் நோக்கு

இந்நூலின்கண் உள்ள பதினான்கு கட்டுரைகளில் பெரும்பாலானவை ஒருபுடை ஒப்புமை உடையவை. எதனையும் எதனோடும் ஒப்பிடுவதற்கு அவற்றின்கண் ஒத்தகூறு, ஒவ்வாக்கூறு என்ற இருதன்மையும் வேண்டும். இவை போன்ற ஒப்பியல் நெறிகள் இந்நூலில் விளக்கம் பெறுகின்றன.

தொல்காப்பியப் புதுமை

தொல்காப்பிய நூல், காலத்தால் மிகப் பழமையாக இருக்கலாம். காலப் பழமைக்காகக் கருத்தும் பழமை என்று மயங்கி எடுத்து எறிந்து இகழ்ந்து விடக்கூடாது என்று விழிப்பூட்டவே ‘தொல்காப்பியப் புதுமை’ என்ற பெயர் இந்நூற்கு. இதை நிறுவும் 16 கட்டுரைகள் இதன்கண்.

சிந்தனைக் களங்கள்

இந்நூலின்கண் 37 சிந்தனைக் களங்கள் உள்ளன. தொல்காப்பியக் களம், சங்க இலக்கியக் களம், காப்பியக்களம், உரைக்களம், சமயக்களம், வரலாற்றுக்களம் எனப் பல திறத்தவை. ஒவ்வொரு துறையிலும் முட்டிய முரணிய மோதிய மெலிய வலிய பகுதிகளை ஆய்வுத்திட்டுக்களாக்கிக் கொண்டு கண்ட முடிபுகள், காரணம்படக் காட்டப்பட்டுள்ளன.

எந்தச் சிலம்பு

எந்தச் சிலம்பு முதலான பன்னிரு கட்டுரைகள் கொண்டது இத்தொகுதி. சிலப்பதிகாரம் என்னும் பெயர் சிலம்பு காரணமாக வந்தது என்பது வெளிப்படை. எனினும் அச்சிலம்பு எது? யாருடையது? என்னும் ஆய்வை வேறுபட்ட கோணத்தில் நிகழ்த்துகிறது எந்தச் சிலம்பு எனும் முதல் கட்டுரை. ஏனைய கட்டுரைகளிலும் இத்தகைய ஆய்வின் தடத்தைக் காணலாம்.

இலக்கிய விளக்கம்

இந்நூல் 14 கட்டுரைகள் கொண்டது. 7 கட்டுரைகள் திருக்குறள் பற்றியவை. நடைமுறையும் செயலும் தெளிவும் நோக்கி எழுதப்பட்டவை. ஏனைக் கட்டுரைகள் புறம், அகம், காப்பியம், சிற்றிலக்கியம், நீதியிலக்கியம் என்ற நூல் வகைகளை ஒவ்வொரு கூறு பற்றி ஆராய்பவை.

இரட்டைக் காப்பியங்கள்

சிலப்பதிகாரம் மணிமேகலை என்ற இரண்டும் கதையாலும் கருத்தாலும் காலத்தாலும் தொடர்புடையவை. இவ்வுறவுக் காப்பியங்கள் ‘இரட்டைக் காப்பியங்கள்’ என்னும் புதிய தொகைப் பெயரால் வழங்கின், தமிழ்ப் பரவலுக்கும் ஆராய்ச்சி ஊற்றுக்கும் இடமாகும் என்பதைப் பதிவு செய்யும் நூல்.

தொல்காப்பியத் திறன்

தொல்காப்பியம் பற்றிய ஆறு கட்டுரைகளையும் திருக்குறள் வெளிப்படை, வள்ளுவர் கண்ட உலகப் போக்கு, மாதவியின் மறுவோலை, இலக்கியத் துணை, பழந்தமிழிசை, பரிபாடற் குமரன், கோயிற் கலைகள், திருவாசக நினைப்பு ஆகிய பிற கட்டுரைகளையும் கொண்ட தொகுப்பு நூல்.

VSP Manickam