வ.சுப.மாணிக்கனார் வாழ்வும் பணியும்

முனைவர் ச.மெய்யப்பன்

மூதறிஞர் மாணிக்கனாரின் மறைவை ஒட்டி நாடு முழுதும் கலங்கி அரற்றியதன் தொகுப்பு. எப்போதும் தமிழ் தமிழ் தமிழ் என்றே ஒலித்துக்கொண்டிருந்த அந்த இனிய இதயம் நின்றுபோனபோது அந்தப் பிரிவு தாளாது பல்வேறு தரப்பினரும் பதிவு செய்த இரங்கல் மண்டிய உணர்வுத் தொகுப்பு.

மாணிக்கக் குறள்

புலவர் இரா. இளங்குமரன்

மூதறிஞர் மாணிக்கனார், ‘வாழ்க்கை ஆயிரம்’ ‘தமிழ் ஆயிரம்’ எனத் திட்டமிட்டுக் குறள் யாப்பில் அந்தாதி அமைப்பில் அறநூல் இயற்றத் திட்டமிட்டார். 506 குறள்கள் மட்டுமே எழுதி முடித்தார். மூலத்தில் புதைந்துகிடக்கும் நுண்ணிய கருத்து நலங்கள், சொல்லழுகு, தொடரழகு, யாப்பு நுட்பங்களை இந்த உரை தெளிவாக விளக்குகிறது.

வ.சுப.மாணிக்கனாரின் சொல்லாக்கம்

முனைவர் பழ.முத்துவீரப்பன்

வ.சுப.மாணிக்கனாரின் மொழிநடை புதுச்சொல் மலிந்தது. தமிழறிஞர்களுள் இவரளவு புதிய சொல்லாக்கங்களைப் படைத்தவர் எவரும் இலர். அவற்றை வகுத்தும் தொகுத்தும் தந்துள்ளார் நூலாசிரியர். தனிச் சொல்லாக்கம், கூட்டுச் சொல்லாக்கம் என்ற இருபெரும் தலைப்புக்களில் சொல்லாக்கங்கள் பாகுபடுத்தப்பட்டுள்ளன.

மாணிக்கச் செம்மல்

முனைவர் இரா.சாரங்கபாணி

மாணிக்கனார் பற்றிய வரலாற்று நூல். அவர்தம் நோக்கினையும் போக்கினையும் பல தலைப்புக்களில் பகுத்துரைக்கிறது. அவர் கடைப்பிடித்த நெறிமுறைகளைச் சில நிகழ்ச்சிகள் வாயிலாகப் புலப்படுத்துகிறது.

மாணிக்கத் தமிழ்

முனைவர் தமிழண்ணல்

‘தமிழ்க் கல்விக்கு மாணிக்கத் தமிழ் வளம் சேர்க்கும். மாணிக்கம் அவர்களின் தனித்தன்மைகளையும் அவரிடமிருந்த எழுத்துத்துறை சார்ந்த சிறப்புக் கூறுகளையும் எவற்றைச் சொன்னால் அவரை இனங்காட்டலாமோ அவற்றை மட்டும் எடுத்து இந்நூல்’ வடிக்கப்பட்டுள்ளது.

மணிக்கத்தடம்

முனைவர் தெ.திருஞானமூர்த்தி

இந்நூல் மூன்று இயல்களாக அமைந்துள்ளது. மாணிக்கனாரின் இலக்கிய அணுகுமுறை இலக்கியக் கொள்கைகள் முதல் இயலிலும், அவரது திருக்குறள் உரைப்பண்பு இரண்டாம் இயலிலும், அவர்தம் ஆழமான வாழ்வியல் நோக்கு மூன்றாம் இயலிலும் விளக்கப்பட்டுள்ளன.

செந்தமிழ்ச் செம்மல்கள்

முனைவர் அ.அறிவுநம்பி

வ.சுப.மாணிக்கனார், கா.சு.பிள்ளை, ஆறுமுக நாவலர் ஆகிய மூன்று செந்தமிழ்ச் செம்மல்களில் முதல் செம்மலாக இடம்பெறுபவர் வ.சுப.மா. இவரது இலக்கியப் பார்வை குறித்த அனைத்துச் செய்திகளையும் ஒருங்கு திரட்டி அருமையான ஆய்வுக் கட்டுரை ஒன்றைப் படைத்திருக்கிறார்.

வ.சுப.மாணிக்கனாரின் சிந்தனைகள்

தமிழ்ப்பிரியன்

வ.சுப.மாணிக்கனார் இயற்றிய அனைத்துத் தமிழ் நூல்களையும் ஆழமாகக் கற்று, ஆய்ந்து, அதில் தோய்ந்து, சிலவற்றைத் தேர்ந்து, அந்த அனுபவத்தை அனைவரோடும் பகிர்ந்துகொள்ளும் பாங்கில், அவற்றைத் தொகுத்து ஒரு நூலாக்கித் தந்திருக்கிறார்.

வ.சுப.மாணிக்கத்தின் திறனாய்வு நெறி

மா.மதியழகன்

‘தமிழ் இலக்கியக் கல்வியாளர்களிடையே திறனாய்வுச் செயல்பாடுகள் அவ்வளவு வீரியமாக இல்லை. ஆனால் வ.சுப.மாணிக்கனார் இலக்கியத் திறனாய்வு பற்றிய சிந்தனையும் செயல்பாடும் மிக்கவராகவே இருந்துள்ளார்’ என்ற உண்மையைப் பல்வேறு கோணங்களில் நிறுவிக்காட்டும் நூல்.

VSP Manickam