மாணிக்கனார் வாழ்க்கை வரலாறு

மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனாரின் வாழ்க்கைக் குறிப்பு


வாய்மை வாழ்வைத் தன் வரலாறாகக் கொண்டு வாழ்ந்தவர் தமிழ்ச் செம்மல் மூதறிஞர் வ.சுப மாணிக்கனார். வாய்மை, தூய்மை, நேர்மை, எளிமை என்ற நான்கு நிலைகளைத் தனது இரு கரங்களாகவும் இரு கால்களாகவும் பெற்றவர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மேலைச் சிவபுரிக்குரிய சிறப்புகள்: வள்ளல் பாரியும் வாய்மொழிக் கபிலரும் வாழ்ந்த பறம்பு மலைப் பகுதியைச் சார்ந்த ஊர். தமிழ்நாட்டு சபைகளுள் தொன்மையும் தொண்டுஞ் சிறந்த சன் மார்க்க சபை அமைந்த ஊர். சபை நிறுவுவதற்குப் பெருங்காரணமாக இருந்த பண்டித மணியாரின் மாணவர் வ.சுப மாணிக்கனார் பிறந்த ஊர்.

17.4.1917 இல் வ.சுப்பையா செட்டியாருக்கும் தெய்வானை ஆச்சிக்கும் மகனாய்த் தோன்றினார். அண்ணாமலை என்பது இவரது இயற்பெயர். பின், மாணிக்கம் என அழைக்கப்பட்டார். நகரத்தார் குல மாணிக்கமாக, தமிழ் மாணிக்கமாகத் திகழ்ந்தார். பெற்றோர் இருவரையும் சிற்றிளம் பருவத்தே இழந்த நிலையில், வறுமையுற்ற நிலையில் பதினோராவது வயதில் பருமா சென்று வட்டிக்கடையில் சிறுகணக்கனாகப் பணிசெய்து, பதினெட்டாம் வயதில் வாய்மைக் குறிக்கோளைக் கடைப் பிடித்து, தமிழகம் வந்து, பொருள் முட்டுப் பாட்டோடு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் புலவர் வகுப்பில் பயின்று, ஆய்வாளனாகவும் ஆசிரியனாகவும் பணியாற்றி, பட்டங்கள் பல பெற்று, அழகப்பர் கல்லூரியில் முதல்வராகும் பேறு பெற்று, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முத்துறை இணைந்த தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணிசெய்து, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்துப் பதவிப் பேறு பெற்று, உலகப் பல நாடுகளைச் சுற்றிப் பார்த்து, தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் வல்லுநர் குழுவின் தலைவனாக நன் மதிப்புடைய தமிழக அரசால் அமர்த்தப்பெற்று, அண்ணாமலைப் பல் கலைக்கழகத்தின் பொன்விழாவில் சிறப்பறிஞர் பட்டம் பெற்று, முப்பத்திரண்டு நூல்கள் எழுதி, தமிழகப் புலவர் குழுவின் தலைவனாகவும் அனைத்திந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் தலைவனாகவும் விளங்கி, வளர்ந்து மன நிறைவான வாய்மை வாழ்க்கை வாழ்ந்த பெருமகனார்.

ஆண் மூன்றும் பெண் மூன்றுமாக ஆறு குழந்தைகளைப் பெற்றுத்தந்த வாழ்க்கைத் துணை ஏகம்மை ஆச்சியுடன் குடும்ப நிலையில் நிறைந்த செல்வம். ஆறு குழந்தைகளின் வளர்ப்புக்குத் தேவையான உடலுழைப்பு, நாள் தோறும் கடமைகள், பொருட் செலவு, வளர்ப்பு முறை, கடமையுழைப்பு இவைகளை பகிர்ந்து வாழ் வாங்கு வாழ்ந்தவர்.

மா. கற்ற கல்வி இளம் வயதில் இரண்டு ஆண்டுகள் குருகுல முறைக் கல்வி கற்றார். அரிதின் அரிதாகப் பல பட்டங்கள் பெற்றாலும் துணை வேந்து பதவி வரை வகித்தாலும் முறையான பள்ளிக்கல்வி பெறாதவர் வ.சுப.மா. தமிழின் பால் நாட்டம் ஏற்பட்ட பொழுது வயது பதினெட்டு. • 1936-1940 ..................................................................................................... வித்துவான் – புலவர்
 • 1945 .............................................................................................................. பி ஓ எல்
 • 1948 ............................................................................................................. எம் ஒ எல்
 • 1951 ............................................................................................................. எம் ஏ
 • 1957 ............................................................................................................. பி எச் டி

வகித்த பதவிகள் :

 1. 1941 -- 1948 .................................................................................................. அரசவள்ளல் அண்ணாமலைப் பல்கலை விரிவுரையாளர்
 2. 1948 ............................................................................................................. கொடைவள்ளல் அழகப்பர் கல்லூரி விரிவுரையாளர்
 3. 1954 ............................................................................................................. அழகப்பர் கல்லூரிப் பேராசிரியர்
 4. 1964 ............................................................................................................. அழகப்பர் கல்லூரி முதல்வர்
 5. 1970 ............................................................................................................. அண்ணாமலைப் பல்கலைக்கழக முத்துறைத் தலைவர்
 6. 1979 ............................................................................................................. மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணவேந்தர்

பெற்ற பட்டங்களும் விருதுகளும்:

 • மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை(1969) ....………………........................... செம்மல்
 • குன்றக்குடி ஆதீனம் ....……………………………….........................……….... முதுபெரும் புலவர்
 • ஈப்போ பாவாணர் சங்கம் ....…………………………….........................…….. பெருந்தமிழ்க் காவலர்
 • அண்ணாமலைப் பல்கலைக் கழகம்(1969) ............................…………….. முதுமுனைவர் (டி.லிட்)
 • திராவிட மொழியியற் கழகம் ......................…………………………………. முதுபேராய்வாளர்
 • தமிழக அரசு(1990) ....……………………………………..............................…... வள்ளுவர் விருது
 • கேரள திராவிட மொழிக் கழகம் ..........................…………………………… முது ஆராய்ச்சியாளர்


தலைவராகப் பணியாற்றியவை:

காரைக்குடித் தமிழ்ச் சங்கம் காரைக்குடித் தமிழ் உயர் ஆராய்ச்சி மையம் தமிழ்ப் பல்கலைக் கழக வல்லுநர் குழு புதுச்சேரி பல்கலைக் கழக தமிழ்த்துறை வல்லுநர் குழு தமிழகப் புலவர் குழு அனைத்திந்தியப் பல்கலைக் கழக ஆசிரியர் மன்றம் மேலைச்சிவபுரி சன்மார்க்க சபைக் கல்லூரிக் குழு பண்டிதமணி மு.கதிரேசனாரின் நூற்றாண்டு விழாக் குழு மேலும் தமிழ் நாடு தெய்வீகப் பேரவை அறிவுறைஞராகவும் தமிழ்வழிக்கல்வி இயக்க நிறுவனராகவும் தில்லைத் திருக்கோவில் பொன்னம்பலத்தின் கண் திருமுறைகள் ஓதி வழிபடும் வாய்ப்பை ஏற்படுத்தியவராகவும் திகழ்ந்தார். மேலைச்சிவபுரியில் தமிழ்வழி சிறு, குறு மழலையர் பள்ளியையும் நிறுவினார்.

வள்ளல் அழகப்பரின் கொடைவளம் ஏத்திக் 'கொடைவிளக்கு' என்னும் கவிதை நூல் படைத்தார். இவர் தம் தனிப்பாடல்களின் தொகுப்பு 'மாமலர்கள்'என்னும்பெயரில் வெளிவந்துள்ளது. இவர்தம் படைப்புக்களுள் வள்ளுவமும் தமிழ்க்காதலும் இரு கண்களெனப் போற்றத்தக்கவை. தொல்காப்பியக்கடல்,திருக்குறட்சுடர், சங்கநெறி, காப்பியப்பார்வை, இலக்கியச்சாறு, தமிழ்க் கதிர், தலைவர்களுக்கு முதலியவை இவர்தம் பிற படைப்புக்கள். திருக்குறளையாவரும் எளிதில் புரிந்து கொள்ள 'உரை நடையில் திருக்குறள்' என்னும் நூலை இயற்றி உள்ளார். மணிவாசகர் பதிப்பக வெளியீடான 'கம்பர்' என்னும் இவரதுநூல், தமிழக அரசின் பரிசு பெற்றது. தமிழ் யாப்பு வரலாறு ,தமிழில் வினைச் சொற்கள், தமிழில் அகத்திணைக் கொள்கைகள் என்னும் நூல்கள் இவரால்ஆங்கிலத்தில் எழுதப் பெற்றவையாகும். மன்பதையின் முன்னேற்றம் கருதி இவர் படைத்த நாடகங்கள் மனைவியின் உரிமை, நெல்லிக்கனி, உப்பங்கழி, ஒருநொடியில் என்பனவாம்.ஆசிரியர்கள்:

மாதாவையும் பிதாவையும் இளம் வயதிலேயே இழந்த பின்னும் தனக்கு குருவாக இருந்தவர்களை ஒளியாகவும் தெய்வத் தோற்றங்களாகவும் கண்டவர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் நடேச அய்யர், ஆங்கில ஆசிரியர் கோபாலன் நாயர், இந்தி ஆசிரியர் மு.கோ.வேங்கடகிருட்டிணன், வடமொழி ஆசான் பி.சி.இராமானுசாச்சாரியார், பிரெஞ்சு மொழியாளார் சிவப்பிரகாசம், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா. இராகவையங்கார், இராமசாமிப் புலவர், ரா.கந்தசாமி, ஆ.பூவராகன் பிள்ளை, மு அருணாசலம் பிள்ளை ஆகியோரை நினைக்குங்கால் அச்சங் கலந்த பணிவு, அறிவு கலந்த நன்றியுணர்வு ஏற்படுவதாக வெளியிடுபவர். இவர்களுள், உற்றுளி உதவிய பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியாரின் மீது மா. கொண்ட பெருமதிப்பும் பேரன்பும் காரணமாகத் தன் காரைக்குடி இல்லத்திற்குக் கதிரகம் எனப் பெயரிட்டு ஆசிரியரின் இல்லத்திற்குள்ளே வாழ்ந்தவர்.விருப்பமுறி:

1986 இல் விருப்பமுறி எழுதினார். அதில் தம் சொத்துகளில் ஆறில் ஒரு பங்கினை ஒதுக்கி, மேலைச்சிவபுரியில் ஒரு அறநிலை ஏற்படுத்தவும் அதில் வரும் வருமானத்தினைக் கல்வி, மருத்துவம், நலவாழ்வு, குழந்தைகள் நலன், அஃறினை உயிர்களின் நலம் முதலான பொது நலங்களுக்குச் செலவிட வேண்டும் எனவும், தம் நூல்கள் அனைத்தையும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். வ.சுப மா எண்ணங்களையும் எழுத்துக்களையும் செயல் வடிவமாக்கியவர் திருமதி ஏகம்மை மாணிக்கம் அவர்கள்.

தமிழுக்குத் தொல்காப்பியத்தையும் வாழ்வின் உயர்வுக்குத் திருக்குறளையும் உயிர்த் தூய்மைக்குத் திருவாசகத்தையும் வழிகாட்டிய தமிழ் மறைகளென வாழ்ந்தவர் மாணிக்கனார். மேலைச்சிவபுரியில் உதித்து, அண்ணாமலையில் பூத்து, அழகப்பரிடம் காய்த்து, மதுரையில் பழுத்த மாங்கனி மாணிக்கம், 24.4.1989 திங்கட் கிழமையன்று புதுச்சேரியில் உதிர்ந்தது.

VSP Manickam