பின் செல்ல

மாணிக்கத் தமிழ்

முனைவர் தமிழண்ணல்

மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் பனிரெண்டு நூல்களை யான் மீண்டும் கற்றேன்,பயின்றேன் என்றுதான் கூற வேண்டும்.என் எண்ணம் இது.இந்நூல் மாணிக்கனார் தம் நூல்களைப் பிறரும் பயில, ஓர் அறிமுக நூலாதல் வேண்டும்.ஒரு சிலரேனும் என்போல, மாணிக்கத் தமிழ் நூல்களைப் பயிலுமாறு, ஆர்வத் தூண்டலாய், வழிகாட்டியாய் ஆதல் வேண்டும்.

தமிழ்க் கல்விக்கு மாணிக்கத்தமிழ் வளம் சேர்க்கும்."மாணிக்கத் தமிழ்" என்ற தலைப்பிற்கேற்ப ,மூதறிஞர்.வ.சுப.மாணிக்கம் அவர்களின் தனித்தன்மைகளையும் ,அவரிடமிருந்த எழுத்துத்துறை சார்ந்த சிறப்புக் கூறுகளையும் எவற்றைச் சொன்னால் அவரை இனங்க்காட்டலாமோ அவற்றை மட்டும் எடுத்து,இந்நூலாக வடித்துள்ளேன்.அவற்றையும் முழுமையாகத் தராமல்,கோடிகாட்டிப் படிப்பவர்க்கு மேலும் தேடும் அவாவை விளைவிக்க முயன்றுள்ளேன்.

சங்க இலக்கியம்,தொல்காப்பியம்,திருக்குறள் ஆகிய மூன்றின் கல்விக்கும்,ஆய்வுக்கும் பரப்புதலுக்கும் ஒரு "கலங்கரை விளக்கம்" இம் மாணிக்கத் தமிழ் என்பதைப் பொறுப்புணர்ச்சியோடு கூற விழைகின்றேன்.பிறவற்றைஎல்லாம் கற்பவர்கள், இம் மாணிக்கத் தமிழ் நூல்களைத் தவற விடுவரேல்,பழந்தமிழ்க் கடலில் கரை ஏறுதல் கடினப்படும்.இடைக்கால நிகழ்வுகளால் 'தமிழ்மை' எனத்தகும் தமிழ்மொழி இலக்கியப் பண்பாடுகள் குழம்பிக் கிடக்கின்றன.அதனால் தமிழ் கற்பார் திசைமாறிப் போகக்கூடாது என்பதற்காகவே இதனை வற்புறுத்தவும் விழைகின்றேன்.ஏனெனில்,சரியான திசை காட்டும் மாலுமியாக அதற்காகவே பிறப்பெடுத்தவர் செம்மல் மாணிக்கனார் என்று எனக்குத் தோற்றுகிறது.

என் தாய் வழிப் பாட்டனார் மேலைசிவபுரி மு.கும.குமரப்ப அய்யாவும் பாட்டி உண்ணாமலை ஆயாளும் அம்மான் மு.கும.நடராசரும் யான் தமிழ் படிக்கத் தூண்டுகோலாகவும்,துணையாகவும் இருந்தனர்.

குழந்தைப் பருவத்திலேயே பெற்றோரை இழந்து,தாய்வழிப் பாட்டனார் இல்லத்தில் வளர்ந்து ஆளான மூதறிஞருக்கும் எனக்கும் இதில் ஓர் ஒற்றுமை கண்டேன்.தன கண்ணுள்ளிருக்கும் கருமணியாய் எண்ணி எனை வளர்த்த கலியாணித்தாயின் பெற்றோருக்கு இந்நூலை அன்புரிமையாக்கி நினவு கூர்வதில் என் நெஞ்சம் நெகிழ்கிறது.

நூன் முகம்

VSP Manickam