பின் செல்ல

மாணிக்க ஒளி

பதிப்புச் செம்மல் ,தமிழவேள் ச.மெய்யப்பன்

'ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாகத் தமிழ்ப் படிப்பு வட்டத்தில் முதல் நிலைக் கருத்தாளராக மாணிக்கனார் இருந்தார்.இவர் ஆய்வு பயிற்சி, தன் முயற்சியால் பெற்றது.தமிழ் ஆசிரியர்கள் பின்னிற்பதை விரும்பாதவர்.எதிலும் முன்னிற்க வேண்டும் என்று விரும்பினார்.தானே எடுத்துக்காட்டாக இருக்கவும் முயன்றார்.'

ஆராய்ச்சி அறிஞரும்,தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தருமான வ.அய்.சுப்ரமணியம் அவர்களின் மதிப்பீடு.இம் மதிப்பீடே அறிஞர்கள் பலரின் கருத்தாகும்.

மூதறிஞர் மாணிக்கனார் ஆராய்ச்சி உலகில் பேரொளியாய் விளங்கியவர்கள்.அவர்கள் ஆய்வு நெறி தமிழ்மரபு சார்ந்தது.தொல்காப்பியத்தின் புதுமைக்கூறுகளையும் பாரதியின் பழமைக் கூறுகளையும் கண்டு நிறுவியவர்.உரையாசிரியர்களைப் பற்றி நிரம்பச் சிந்தித்த உரையாசிரியர்.தொல்காப்பியம் எழுத்ததிகாரம் மூன்றியலுக்கு உரை கண்டவர்.திருக்குறளுக்கும் தெளிவுரை கண்டவர்.மரபுவழிப்புலமைச் சங்கிலியின் கடைசி வளையமாகத் திகழ்ந்தவர்.ஓய்வென்றுஅறியாது உழைத்த உரம் சான்ற பேராசிரியர்.

மாணிக்கனார் கண்ட இலக்கியத் தளங்களும் சிந்தனைக் களங்களும்,காப்பியக் களங்களும் பல.தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் திருக்குறளும் ஆகிய முப்பெரும் நிலத்தில், இவர் கண்ட விளைச்சல்கள் பல.

பழம் போலும் சங்கப் பனுவலைக் கற்றால்
கிழம்போகும் கீழ்மையும் போம்.
மாணிக்கக் குறள் - 461

சங்க இலக்கியத்தில் மாளாத காதல் கொண்ட இவர்கள் இயற்றிய அரியபெரிய ஆராய்ச்சி நூல் தமிழ்க்காதல் .ஆய்வு வன்மைக்குத் 'தமிழ்க்காதல்', சிந்தனைத் தெளிவிற்கு 'வள்ளுவம்', புலமை நலத்திற்குக் 'கம்பர்' ஆகிய நூல்களை அறிஞர்கள் இனங்காட்டி மகிழ்வர்.

20- ஆம் நூற்றாண்டு உரைநடை வரலாற்றில் இவருக்கொரு சிற்ப்பிடமுண்டு.இவருடைய மூன்று வரிகளே இவரை அடையாளம் காட்டிவிடும்.தூய செந்தமிழ் நடை,செறிவான நடை,கற்கத்தக்க பெருமிதநடை ,பீடுநடை,பேராசிரியர்நடை,சொல்லாக்கம் இவருக்குக் கைவந்த கலை.இந்தத் தலைமுறையில் இவரைப் போல் சொல்லாக்கம் செய்தவர் இவர்.

தமிழின் தனித்தூய்மை அறியவும்,வளர்க்கவும் சான்றோராகவும் தொல்காப்பிய அறிவு வேண்டுமென்பது இவர்கள் கருத்து.வளர்ந்து வரும் தமிழ் ஆய்வில் மாணிக்கனார் பதித்த சுவடுகள் பல.புதிய கருத்துச் சூறாவளிகள் அழிக்க முடியாதவை.அவை ஆழமாகப் பதிந்தவை.

'இலக்கியச் சாறு' என்னும் நூலில் புதிய புதிய தலைப்புக்களில் பாடுவோர் பாட்டாண்மை,திருக்கோவைப் புரட்சி ,தேவர்கள் படும் பாடு,தற்சிறுமை,இலக்கிய முத்திறன்,இலக்கிய வெள்ளம் என்னும் தலைப்புகளில் தமிழ் இலக்கிய வெள்ளத்தினைத் தம் கூர்ந்த மதியால் அளந்து காட்டி உள்ளார்.தமிழ் இலக்கியக் கனிகளில் சாறு வடித்த நூல் இலக்கியச்சாறு.

மூதறிஞர் மாணிக்கனார் வாய்மையில் வழுவாது வாழ்ந்தவர்.வாய்மை அறத்தைத் தாய்மை அறமாகக் கொண்டு ஒழுகியவர்.அவர் தம் வாழ்வியல் கோட்பாடுகள்,அவர் தலைமை ஏற்ற அமைப்புக்கள்,நிறுவனங்கள் சீர்மையும்,செழுமையும் கொண்டன. _அவர்தம் தமிழாக்க நெறிகள்,அவர் பெற்ற தமிழியக்க வெற்றிகள்,அவர்தம் கல்விப் பணிகள்,பண்புகள்,திட்டங்கள்,அவர் மேற்கொண்ட செவ்வறங்கள் முதலியவற்றை என் பேராசிரியர் இரா.சாரங்கபாணி அவர்கள் "மாணிக்கச் செம்மல்" என்னும் நூலில் பல சொல்லோவியங்களைக் கொண்டு அழகு மிளிரும் உயிரோவியமாக்கி உள்ளார்.அந்நூல் கற்கத்தகுந்த நூல்.

காந்தி அண்ணல் தோன்றிய அக்டோபர்த் திங்களில் மாணிக்கனார் பற்றிய வாழ்க்கை வரலாறு,அவர் நூல்கள் பற்றிய திறனாய்வு ஆகிய இரு நூல்களையும் ஒரு சேர ஒரே நேரத்தில் வெளியிடுவதைப் பெரும் பேராகக் கருதி பெருமிதம் அடைகிறேன். மாணிக்கக் குறள், மாணிக்க உரை மாணிக்கத் தமிழ் என மாணிக்கனார் தமிழாற்றல் சங்கத்தமிழ் போல பன்முக நலன்களைக் கொண்டது.

மணிவாசகர் பதிப்பகம் பற்றி மாணிக்கனார் பகர்வன........... "என் நாற்பதாண்டுக் கால எழுத்துத் தொகுதிகளை மறித்து நோக்கி, ஓரினப் பதிப்புகளாகக் கொண்டு வரும் வாய்ப்பினை மணிவாசகர் பதிப்பகம் எனக்கு வழங்கியுள்ளது.எந்தப் பதிப்பகத்தாரிடமிருந்தும் யாருக்கும் கிட்டாத இனிய வாய்ப்பினை நான் பெறுகின்றேன்.இது அறிவறிந்த பேறன்றோ!"

VSP Manickam