பின் செல்ல

பொய் சொல்லா மெய்யன்

பழ.கருப்பையா

அரைக்கால் சட்டையைக் கழற்றிவிட்டு, வேட்டிக்கு மாறு முன்னரே வ.சுப.மாணிக்கம் பர்மாவுக்கு ஒரு வட்டிக் கடைக்கு வேலைக்குப் போய்விட்டார்.அந்தக்கடை முதலாளி வருமானவரி அதிகாரியிடம் சொல்லச் சொன்ன பொய்யை சொல்ல மறுத்ததால்,அவர் அடுத்த கப்பலிலேயே திருப்பி அனுப்பப்பட்டார்.

பிறப்பிலேயே இயற்கை அறிவு காரணமாக அவர் கொண்டிருந்த வாய்மை,ஒழுக்கம் போன்ற நடைமுறைகள்,அவர் பிற்காலத்தில் கல்வியால் பெற்ற செயற்கை அறிவு கெட்டிப்படுத்திக் கோட்பாடுகளாக வடிவெடுத்து,அவர் தளர்ச்சியின்றிச் செயல்படக் காரணமானது.

வடமொழி,தென்மொழிப் புலமையாளரான இணையற்ற பண்டிதமணி கதிரேசச் செட்டியாரின் கையைப் பற்றிக்கொண்டு அவருடைய கற்கும் வாழ்க்கை தொடங்கியது.மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக அவருடைய கற்பிக்கும் வாழ்க்கை முடிவுற்றது.

துணைவேந்தராகப் பணியாற்றியபோது அவருக்கு ஒதுக்கப்பட்ட தனி மகிழ்வுந்தில் மதுரைப் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிக்கொண்டு வண்டியைத் திருப்பி அனுப்பிவிடுவார்.அங்கிருந்து பேருந்தில் ஏறிக் காரைக்குடியில் உள்ள தன்வீட்டுக்கு வாரக் கடைசியில் வந்துவிட்டுத் திங்கள்கிழமை காலை திரும்புவார்.இன்றைய துணைவேந்தர்கள் பலரால் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத வாழ்க்கை ஒழுங்கு இது.இன்று பலரும் விலை கொடுத்து வாங்கிய பதவியில் விலை பெறாமல் எதையும் செய்வதில்லை என்றாகிவிட்டனர்.

அவர் எங்கும் தன்னந்தனியாக நடந்து செல்லும் இயல்பினர்.நான்கு முழ வேட்டி,அரைக்கைச் சட்டை,தோளில் ஒரு துண்டு,அந்தத் துண்டால் தன வாய் புதைத்து நடப்பார்.காலில் செருப்பிருக்காது.'மிதியடி குறை' என்பது அவருடைய புதிய ஆத்திச்சூடி.மண்ணோடு மாந்தனுக்கு இடைஅறவு படாத தொடர்பு வேண்டும் என்னும் எண்ணத்தினர் அவர்.நான் அவரைக் கும்பிடுவேன்.அவர் திரும்பக் கும்பிட மாட்டார்.ஏன் வருகிற போதெல்லாம் கும்பிடுகிறாய் என்றுவேறு கேட்பார்.கும்பிடுவதற்கு ஆள் கிடைப்பதே அரிதாக இருக்கிறது என்பேன்;சிரித்துக்கொள்வார்.

ஊழ் கூட்டுவித்த ஒப்பற்ற துணைவியார் ஏகம்மை ஆச்சி, கல்யாண வீட்டுக்குப் போனேன் என்று சொல்லமாட்டார்.திருமணவீட்டுக்குப் போனேன் என்றுதான் சொல்வார்.வ.சுப.மாணிக்கம் சொன்னதை மட்டுமன்று சொல்லாததையும் உய்த்துணர்ந்து செயல்படுவார்.

திருக்குறள் உரைவேற்றுமை ஆசிரியர் இரா.சாரங்கபாணி ,வ.சுப.மாணிக்கத்தின் நெஞ்சுக்குகந்தவர்.இவர் (வ.சுப..மா.) குட்டை.இரா.சாரங்கபாணி படு நெட்டை."வ.சுப.மா.வின் சொற்களைத் தவற விட்டுவிடக்கூடாது என்று அவர் குனிந்து வளைந்து கேட்பார்.அப்போதெல்லாம் தன்னுடைய உயரத்தையே சபித்துக் கொள்வது போலிருக்கும் அவர் முகத்தோற்றம்.வ.சுப.மாணிக்கம் அறிஞர்க்கெல்லாம் அறிஞர்.

வ.சுப.மாணிக்கம் தனித்தமிழ்க் கொள்கையினர்.பெரியார் தமிழ் வரிவடிவத்தை மாற்றியதையும் ,அரசு அதை உடன்பட்டதையும் இவர் உடன்படவில்லை.அதை ஏற்பதால் உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கையே குறைந்துவிடும் என்றஞ்சினார்.ஐ,ஔ போன்ற எழுத்துக்களுக்கெல்லாம் சீர் திருத்தத்தின்படி என்ன வேலை?ஆழ்ந்த அறிவினால் தொல்காப்பியர் வரையறுத்ததை எல்லாம் ,ஒரே போக்குடையதாகவோ,தட்டச்சின் வசதிக்கேற்பவோ,மாற்றுகிற முயற்சி கொள்ளத்தக்க முயற்சியில்லை என்று அவர் எண்ணினார்.

இன்னொரு சாரார் "FORM" என்பதை "பாரம்" என்று எழுதுவதே சாலப் பொருத்தமுடையது என்று சொன்னார்கள்.வேறு சிலர் திரைப்படச் சுவரொட்டிகளிலே "கன்பைட் காஞ்சனா" என்று அச்சிட்டு ஒட்டத் தொடங்கினர்.

வ.சுப.மாணிக்கம் கேட்டார்..."தமிழ் ஒலிகள் ஆங்கிலத்தில் இல்லையே! ண்,ழ்,ள்,ற் இவை போன்றவை ஆங்கில ஒலியமைப்பில் இருக்கின்றனவா?Va ள்ள uvar, Pa ண் diyan என்றெல்லாம் எழுதலாமா..? அதன்பிறகு அப்படியெல்லாம் சொன்னவர்கள் நவத்துவாரங்களையும் பொத்திக்கொண்டார்கள்.

எம்மொழியும் உலக ஒலியனைத்தும் உடையதாய் இருப்பதில்லை;;ஒலிப்பெருக்கம்வளர்ச்சியாகாது.வாயுட் புகுந்த வேற்றுப்பொருள்களை நா வளைத்துத் துளைத்து எப்படியும் வெளியேற்றுவதுபோல,தமிழும் வேற்றொலிகளை ஒதுக்கிவிடும் என்றார் வ.சுப.மாணிக்கம்.

வீரமாமுனிவர் தமிழ்த்தோற்றம் பெற்றது போல ,வடசொற்கள் தமிழுக்கு வரும் போது,தம்முருவத்தை அகற்றித் தமிழுருவம் பெறவேண்டும் என்பார்.வள்ளுவனிலிருந்து,கம்பன்,வீரசோழியப் புத்தமித்திரர் வரை,தவிர்க்க இயலா வகையில் நுழையும் வடசொற்களைத் தமிழ் ஒலி அமைப்புக்கு ஏற்ப மாற்றியே கை ஆண்டனர் என்றார்.தமிழினத்தின் பிறப்பிடம் குமரிக்கண்டமே என்று வாதிட்டார் வ.சுப.மாணிக்கம்.பழந்தமிழ் மக்கள் வாழ்ந்த குமரி நாடாக இருந்ததைக் கடல் கொண்டமையால்தான்,அந்தக் கடலுக்குக் குமரிக்கண்டம் எனப் பெயர் ஏற்பட்டது என்றார்.

மற்ற இருபுறக் கடலுக்கும் மேலைக்கடல்,கீளைக்கடல் என்று திசைப் பெயர்களைத் தவிர பண்டைக் காலத்தில் வேறு பெயர்களில்லை.ஆனால்,தென் கடல் மட்டும் குமரிக்கடல் என்று பெயர் சுட்டி அழைக்கப்பட்டதற்குக் குமரி நாடாக இருந்து கடல்கோளுக்கு இரையானதுதான் காரணம் என்றார்.

தென்புலத்தார் என்று குறள் குறிப்பிடுவது நமது மூதாதையரான குமரிக் கண்ட மக்களையே! 'குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள' என்று வரலாறு பாடவந்த இளங்கோவடிகள் கடலைக் கொடுங்கடல் என்று வாயார வைவதற்கு காரணம் தமிழ் மக்களை விழுங்கி விட்டமையால்தான் என்பார்.உலகைத் துறந்த இளங்கோவடிகள் இனப்பற்றை துறக்கவில்லையே என எடுத்துக்காட்டுவார்.திருக்குறளையும்,தொல்காப்பியத்தையும் அவர் கண் எனப் போற்றினார்.அவர் எழுதிய " வள்ளுவம் " என்னும் உரைநடை நூல் தமிழ் உலகில் பெரும் அதிர்வினை ஏற்படுத்தியது.

பரிமேலழகருக்குப் பின்பு தமிழ் உரைநடை கைகட்டி,வாய்பொத்தி சேவகம் செய்தது வ.சுப.மாணிக்கத்திற்குத்தான்! அந்த வள்ளுவம் நூல் முழுவதிலும் அவர் சொல்லியுள்ள செய்தி,திருக்குறள் கடைப்பிடிக்கப்படாமல் போற்றப்படுவதால்,எழுதியவனுக்கோ,படித்தவனுக்கோ யாதொரு பயனுமில்லை என்பதுதான்.மனித குலத்தின் மீது படிந்துள்ள அழுக்குகளைக் கழுவவே வள்ளுவன் திருக்குறளை எழுதினான்.அந்த அழுக்குகளைக் கழுவிக் கொள்ளாமல்,வெறும் வள்ளுவர் துதிகளால் என்ன பயன் என்பது அவருடைய கேள்வி!"புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும்" என்பது ஆணை வள்ளுவம் என்று அடிக்கடி சொல்வார்..வ.சுப.மாணிக்கம்.

தமிழ் செம்மொழித் தகுதி பெற்றுவிட்டது.ஆனால் பள்ளிகளில் கற்பிக்கும் தகுதி பெறவில்லை என்று வெளியேற்றப்பட்டுவிட்டது. வள்ளுவரின் சிலை குமரியில் விண்ணை முட்டுகிறது.இது
அடையாளப்படுத்தல்களின் காலம்!
.சுப.மாணிக்கங்களின் காலமில்லை!...........

தினமணி(8.2.2009)

VSP Manickam